வாட்ஸ்அப் உலகளாவிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு உரையாடல் செயலி. இது ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS) போன்ற அனைத்து போன் இயங்குதளங்களிலும் வேலை செய்யும் செயலி. 2009 வருடத்தின் இறுதியில் வந்திருந்தாலும் 2010 ஆண்டு தான் அதிகம் பயன்பாட்டிற்கு வந்திருந்தது.
Image by Alfredo Rivera from Pixabay
சில வருடங்களுக்கு முன்பு, சரியாக சொன்னால் பிப்ரவரி 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது (4 பில்லியன் பணமாகவும், 12 பில்லியன்களை பேஸ்புக்கின் பங்குகளாகவும், மீதமுள்ள 3 பில்லியன்களை வரையறுக்கப்பட்ட பங்குகளாவும் வழங்கியது). அதன்பின் பேஸ்புக் நிறுவனம் வாட்ஸப்பில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தது, இது பயணிகளிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.
வாட்ஸ்அப் இன் தொடக்க காலங்களில் பயன்படுத்த எந்த ஒரு கட்டணமும் செயலியில் விளம்பரமும் கிடையாது என அதன் நிறுவனர்கள் தெரிவித்திருந்தனர். வாட்ஸ்அப் செயலியை பயன்பாட்டிற்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகள் வாட்ஸ்அப் கட்டண மயமாக்கப்படும் என வந்து கொண்டிருந்ததுதான்.
பயனர்களின் தனியுரிமை
ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் கட்டணம் அல்லது விளம்பரங்கள் வரும் எனும் வதந்தி பெரியளவில் கிளம்பும் போது வாட்ஸ்அப் நிறுவனம் எங்களுக்கு பயனர்களின் தனியுரிமை தான் முக்கியம் எனவும் எக்காரணத்திற்கும் வாட்ஸ்அப் கட்டணம் வாங்கும் எண்ணம் இல்லை எனவும் அறிவித்துவந்துள்ளது.
பயனர்களின் தனியுரிமை என வரும்போது அனைத்து நிறுவனங்களும் முன்னுரிமை அளித்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு நமது இந்திய அரசு பல செயலிகளை தடை செய்ததும் பயனர்களின் தனியுரிமை கொள்கை மீறல்களால் தான். சில நிறுவங்கள் தங்கள் செயலியை பயன்படுத்தும் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி அதை விற்பது நடந்துகொண்டுதான் உள்ளது. அதனாலதான் இந்திய அரசு அப்படிப்பட்ட செயலிகளை கண்டறிந்து தடை செய்தது.
வாட்ஸ்அப்-பின் புதுப்பிக்கப்பட்ட பயனர்கொள்கை
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் ஒரு POP-UP திரை மூலம் அனைத்து பயனர்களுக்கும் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமை கொள்கை பற்றி அறிவித்து வருகிறது. அந்த திரை செய்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால் வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டிற்கு வருகிறது. எனவே இந்த புதிய தனியுரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ளும் பயனர்களுக்கு மட்டுமே வாட்ஸ்அப் சேவை வழங்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கின்றது.
Image from Whatsapp Screenshot
மேலே உள்ள படத்தில், வாட்ஸ்அப் தங்களது பயனர்களின் எந்தெந்த தகவல்களை எப்படி எல்லாம் பயன்படுத்த உள்ளது மற்றும் அந்த தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தின் மற்ற சேவைகளுடன் எவ்வாறு பயன்படுத்தவுள்ளது என்பது பற்றி குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த புதிய கொள்கை பிப்ரவரி 8 முதல் செயல்படுத்தபடவுள்ளதாகவும், அதன் பின்பு வாட்ஸ்அப் சேவையினை தொடர்ந்து பயன்படுத்த இந்த புதிய தனியுரிமை கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். இல்லையெனில் வாட்ஸ்அப் சேவைகளை பெறமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களது தனிப்பட்ட விவரங்களை பேஸ்புக் மற்றும் அதன் இணை நிறுவனங்களை பயன்படுத்த கூடாதென விரும்பினால் நீங்கள் உங்கள் கணக்கினை நீக்கிக்கொள்ளவும் வழி சொல்லப்பட்டிருக்கிறது,
முந்தைய பதிப்புகளிலேயே உங்கள் தகவல்களை பெறுவதற்கு வழியிருந்தாலும், நீங்கள் விரும்பவில்லையென்றால் அதனை நிராகரிக்கும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புதிய பதிப்பில் அந்த வசதி நீக்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ்அப் பயன்படுத்தும் பட்சத்தில் அதனுடைய மற்ற சேவைகளுக்கு நமது தகவல்கள் பரிமாற்ற அனுமதி அளிக்கப்படவேண்டியது கட்டாயமாகிறது.
எந்தெந்த தகவல்கள் பெறப்படும்?
வாட்ஸ்அப் உங்களின் சுயவிவர புகைப்படம், ஸ்டேட்டஸ், 'என்னை பற்றி' போன்ற தகவல்கள். உங்களின் கைபேசியின் விவரங்களான செல்போன் சேவை நிறுவனம் பற்றிய தகவல்,இணைய முகவரி எனப்படும் IP Address, போனின் பேட்டரி நிலை, பயன்பாட்டு அளவு என அதிக தகவல்களையும் பெறுகிறது.
இப்படி பெறப்படும் தகவல்கள் பேஸ்புக் மற்றும் அதன் இணை சேவைகளை மேம்படுத்தவும், புதிய அம்சங்களை கொண்டுவரவும், உபயோகிப்பாளர்களுக்கு பயனுள்ளதாகவும் மற்ற பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு விவரங்களை எடுக்கும் போது நமது உரையாடல்களும் கண்காணிப்படுமா என்ற அச்சம் அனைவருக்குமே வரும். ஆனால் அதற்க்கு பேஸ்புக் நிறுவனம், பயனர்களின் உரையாடல் அனைத்தும் இருமுனையிலும் குறியாக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களால் கூட செய்திகளை படிக்கமுடியாது, மேலும் உரையாடல்கள் சென்றடையும் வரைமட்டுமே அவர்களது சேவையகத்தில் இருக்கும், அதன் பின்பு அழிக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதே வகையில் தான் வாட்சப்பில் அனுப்பப்படும் படங்களுக்கும் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பணப்பரிவர்த்தனை தொடர்புடைய கொள்கைகள் அனைத்தும் அந்தந்த நாட்டின் கொள்கைகள் படியே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலைப்படி வாட்ஸ்அப் விளம்பரங்கள் காட்டும் எண்ணமில்லை என்றபோதிலும் பிற்காலத்தில் அப்படி விளம்பரங்களை காட்டும் வேளையில் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படும் எனவும் கூறியுள்ளனர்.
என்ன செய்யலாம்?
இந்த புதிய கொள்கைகளின் படி உங்களுக்கு வாட்ஸ்அப் சேவையினை பயன்படுத்த விருப்பமில்லையென்றால் உங்கள் கணக்கினை அழித்துவிடலாம். ஏற்கனவே இந்த புதிய கொள்கைகளுக்கு அனுமதி அளித்து பயன்படுத்தும் பயனர்களுக்கு 30 நாட்களுக்குள் கணக்கினை அழித்துக்கொள்ளவும் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் உபயோகிக்க மனமில்லை என்றாலும் உரையாடல்களுக்கு என்ன செய்வது எங்கே போவது என கவலை வந்தால் உங்களுக்காகவே இருக்கிறது டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகள். இந்த புதிய அறிவிப்பினால் பலர் வட்சப்பை விட்டு இந்த இரு செயலிகளை அதிகம் உபயோகிக்கப் போவதாக கூறிவருகின்றனர். யாருக்கு தெரியும் பிற்காலத்தில் டெலிகிராம் மற்றும் சிக்னல்'லை பேஸ்புக் வாங்கும் நிலைகூட வரலாம்.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக